பழையர் இன மக்கள் அவர்களின் மலை மற்றும் மழைத்தெய்வங்களை வழிபடும் முறை
ஆசிரியர் : முருகேஸ்வரி
Read the translated story in English
கோடைக்கானலில் உள்ள பாரதி அண்ணா நகர் என்ற கிராமத்தில் பழையர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வெயில் அதிகமாயுள்ள சித்திரை மாதத்தில் ஒரு நாள், அவர்கள் தங்களது மலைத்தெய்வமான பூத நாச்சியம்மனுக்கு விழா எடுத்துக்கொண்டாடுவர் – வேனல் காலத்தில், தண்ணீர் பற்றாக்குறையுமிருக்கும், அதே சமயம், அதிக உஷ்ணத்தினால் காட்டுத்தீயும் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இவ்விரண்டாலும் தங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படக்கூடாது எனக்கருதி ,இவ்விழா எடுப்பர்.
பூத நாச்சியம்மன் எனும் மலைத்தெய்வம்தான் தங்களைக்காப்பதாக பழையர்கள் நம்புகிறார்கள். இதைப்பற்றி மேற்கொண்டு தெரிந்துகொள்வதற்காக பூம்பாயி [எ] வசந்தி எனும் பழையர் பெண்மணியைக் கேட்டதற்கு, அவர் கூறுகிறார் : “ நிலம், ,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களையும் தன்னுள் அடக்கியவள் என்பதையும், “ நாச்சி “ என்பது தெய்வத்தைக்குறிக்கும் என்பதாலும், எங்களுடைய வனங்களுக்கு தெய்வமானதாலும் “பூத நாச்சி அம்மன் “ என்று அழைக்கிறோம்; மற்றவர்களைப்போல் மூன்று அல்லது நான்கு நாட்கள் எல்லாம் நாங்கள் விழா எடுப்பதில்லை; ஒரே ஒரு இரவு மட்டும்தான் இந்த விழா நடக்கும் ; வனங்கள் காக்கப்படவேண்டும் என்றும், பற்றாக்குறையில்லாமல் மழை பொழிந்து நீர்வளம் நன்றாக இருக்கவும் வேண்டி, எங்களது மலைத்தெய்வமான இந்த பூதநாச்சியம்மனை வழிபட்டு வருகிறோம்.”
, இந்த பூத நாச்சி அம்மனானவள், ஆண் தெய்வமானாலும், பெண் உருவில் இருப்பதால், ஒரு தாயாரைப்போல் மக்கள் குற்றம் எல்லாவற்றையும் மன்னித்து அவர்களை ஏற்றுக்கொள்வாள் ; ஆனால், அதே சமயம், தவறுகளைக்கண்டால், ஆண்களைப்போல், கோபம் கொண்டு நியாயம் கேட்டு தண்டிக்கவும் செய்வாள்; இத் தெய்வம் ஆண் உருவகமாகவும் இருப்பதால், தேவராடிகள், பெண்களைப்போல் நீண்ட முடிவளர்க்கவும், மஞ்சள் தேய்த்துக்குளிக்கவும் செய்கின்றனர். அவர்களது நீண்ட முடி சாதாரண நாட்களில் மற்றவர் கண்களில் – குறிப்பாக, பெண்கள் கண்களில் – படாமலிருக்க வேண்டி, தலைப்பாகையால் கட்டி வைக்கின்றனர் ; சாமியாடும்போது மட்டுமே பெண்கள் பார்க்கலாம்; மேலும், பெண்களுக்கு குடிப்பழக்கமோ , புகை பிடிக்கும் பழக்கமோ இல்லாததால், தேவராடியாக இருப்பவரும், அவற்றை உபயோகிக்காமல், சுத்தமாக இருக்கவேண்டும் என்பதுதான் விதி. மேலும், பச்சை போடும்போது, அடர் காட்டிற்குள் பெரும் பாறைகள் இருக்குமிடத்தில், அருவிகளிருக்குமிடத்தில் போக வேண்டியிருப்பதாலும், அச்சமயத்தில் பெண்களை அழைத்துப்போவதில்லை. பெண்கள் கோவிலுக்கு மட்டும் செல்கின்றனர் – அதுவும், தேவராடி, மஞ்சள் தேய்த்து ஆற்றில் நீராடி, ஆற்றிலிருந்து எலுமிச்சம்பழம் எடுத்துக் கோயிலுக்கு வந்த பின், சாமியாடும்போதுதான் பெண்கள் கோவிலுக்குச் செல்வர்; அதற்கிடையில், சட்டப்பன் வீட்டுக்குடும்பமும், தேவராடி வீட்டுக்குடும்பமும் – அதாவது அந்தக் குடும்பத்தைச்சேர்ந்த ஆண்கள் மட்டும் தான் கோவிலுக்குச் செல்ல உரிமையுண்டு. இதுதான் பழையர்களின் வழக்கம் ; அவர்கள் நம்பிக்கை – அவர்கள் பூதநாச்சியம்மன் விழாவுக்குக், கடைப்பிடிக்கும் விதிகள்.
முன்பு கூறியதுபோல் ,பூதநாச்சியம்மனுக்குப் பணிவிடை செய்வதற்கு இரண்டு குடும்பங்களுக்குத்தான் உரிமை உண்டு. அக்குடும்பத்து ஆண்கள் மட்டும்தான் இதில் பங்கெடுப்பர். விழாவிற்கு ஒரு மாதம் முன்னர், “ பச்சைபோட்டுப்பார்ப்பது ” என்பதைச் செய்வார்கள். பச்சை என்பது ஒரு வகைச் செடி ; . இதன் பூவுடன் குறிப்பிட்ட சில காட்டுச்செடிகள், கொடிகள், மூன்று பழவகைகள், காய் வகைகள், கற்கள், தேன், கிழங்கு, தண்ணீர்க்கொடி, போன்றவற்றை ஒரு பாறையின் மீது வைத்து அதை வழிபட்டு – “பச்சை போட்ட” – பின்னர், அந்த மலைத்தெய்வத்தினிடமிருந்து உத்தரவு கிடைத்த பின் தான் அவர்கள் இந்த விழாவைக்கொண்டாடுகிறார்கள்.
பூதநாச்சி அம்மனின் பூசாரி – தேவராடி எனப்படுபவர் – குடும்பத்தினரும், சட்டன் குடும்பத்தினரும் அன்று இரவு நடைபெறப்போகும் விழாவிற்கு, தேவராடி அணியப்போகும் வெள்ளை வேஷ்டி, மஞ்சள் குங்குமம், மருந்து, எலுமிச்சம்பழம் போன்றவற்றை ஒரு தட்டில் வைத்துக்கொடுக்கின்றனர்; . இப்போதுள்ள தேவராடி, இருபத்துமூன்று வயதுள்ள வேலுச்சாமி என்பவர்.
தேவராடியாக இருப்பவர் மற்ற ஆண்களைப்போல், மதுபானம், பீடி, புகையிலை முதலிய வழக்கங்கள் இல்லாமல், சுத்தமான ஆணாக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே இவர் மீது பூதநாச்சி அம்மன் இறங்கும் என்பது இம்மக்களது நம்பிக்கை.
சுத்த பத்தமாக ஆற்று நீரில் மஞ்சள் பூசிக்குளித்து, அங்கிருந்து எலுமிச்சம் பழம், மருள் காய் முதலியவற்றை எடுத்துக்கொண்டு, சட்டப்பன் வீட்டார் கொடுத்த துணிகளை உடுத்தி, அம்மன் அருகில் அமர்ந்து, அந்த தெய்வத்தின் பெயரையும், கோடைக்கானல் மலைத்தொடர்களின் பெயர்களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி, இவ்விடங்களிலுள்ள மலைத்தெய்வங்களின் பெயர்களையும் சேர்த்து, ஒரு பாட்டாகப் பாடி வருவார். பிறகு, “ தேவர் வீடு” எனும் இடத்திற்குச் சென்று, அங்கு ஐந்து மண்பானைகளில் வைத்திருக்கும் தண்ணீரையும், மற்றப் பொருட்களையும் தொட்டு வணங்குவார். அதன் பின்னர்தான், பூதநாச்சி அம்மன் அவர் மேல் இறங்கி அவர் ஆட ஆரம்பிப்பார்.; அப்போது மருள்காயையும் எடுத்து ஆடுவார். அவர் அப்படி சாமி ஆடும்போது, பழையர் மக்கள் அவர்களின் கொட்டு, குழல் ஆகியவற்றை இசைப்பர்; அங்கு பாடப்படும் பாட்டுக்களும், ஒரே ஒற்றுமையுடன், மலைத்தெய்வங்களின் அருளோடு, மழைத்தெய்வங்களும் நல்ல மழையைக்கொடுத்து, ஆறு, குளம், அணைக்கட்டுகள் நிரம்பி வழியவும், மண்ணின் வாட்டத்தைப் போக்கவும் வேண்டி இருக்கும். இதன் பின்னர், அங்கு கூடி இருக்கும் மக்கள் எல்லோரும், தேவராடியிடமிருந்து அங்கு வைத்து வழிபட்ட தண்ணீர், மஞ்சள் இரண்டும் வாங்கி வந்து, அவற்றைக்கலந்து, தங்கள் வீட்டுக்கூரை மீது தெளித்துவிடுவர். இந்த வழிபாடு நடக்கும் அன்றைக்கே நல்ல மழையும் பெய்யும் என்பது கண்கூடு.
இதுவே பழையர் மக்கள் அவர்களது மலைத்தெய்வமான பூதநாச்சி அம்மனை வழிபடும் முறை. இந்த வழிபாட்டால், நல்ல மழைபொழிந்து, வனம் செழித்து இருக்கும் என்று நம்புகின்றனர்.
எங்களுடைய இந்த வழிபாட்டைக்காண வாருங்கள் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம் – பழங்குடி மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காப்போம்.
நன்றி.
ஆசிரியர் : முருகேஸ்வரி – கோடைக்கானலில் வாழும் பழையர் பெண்மணி
இந்தக் கதை முதன்முதலில் தி கொடை குரோனிக்கிள்ஸில் வெளிவந்தது, மேலும் இது ஒரு கூட்டு முயற்சியாக மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
Read the original story in English